April 24, 2009
இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவன் எங்கள் பிரபாகரன்
புத்தகங்கள்,காயமுற்ற போராளிகள், செஞ்சோலை சிறுபிள்ளைகள் இவர்களோடே அதிக நேரம்செலவிடுவதாய் பிரபாகரன் அவர்கள் நேர்காணலில் கூறியிருந்ததால் காயமுற்ற போராளிகள் இல்லத்தையும், யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிஞ்சுகளுக்கு தானே தகப்பனாகி, அவர்களைத் தாலாட்டும் தாய்மடியாய் அவர் உருவாக்கிய செஞ்சோலை இல்லத்தையும் தரிசிக்க விரும்பினேன். அடுத்தநாள் காலை காயமுற்ற பெண் போராளிகள் இல்லத்திற்கு கூட்டிச் சென் றார்கள்.முல்லைக்கொடி படர்த்திய புறவேலி. வெயில் நிறுத்தம் செழித்த தென்னை மரங்கள். நீர்தெளித்த முற்றம். நாற்புறமும் பூச் செடிகள். என் தெய்வம் வாழும் இடமொன்று கண்டேன். இருபது படுக்கைகள் இருந்திருக்கு மென நினைக்கிறேன். அனைவருமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான பெண் போராளிகள். பாதிப்பேர் முதுகெலும்பில் காயம்பட்டு கழுத்துக்குக் கீழ் முழுதாக அசைவும்,உணர்வும் இழந்தவர்கள். மீதிப்பேர் இடுப்புக்குக் கீழே செயல்திறன் இழந்தவர்கள். கட்டிலில் உடலும் களத்திலே உணர்வுமாய் படுத்திருந்த அப்பிள்ளைகளின் புன்னகைபோல் பூமியில் வேறு எவரிடத்தும் நான்பார்த்ததில்லை. உணராத உணர்வொன்று ஈர்த்தென்னை ஆட்கொண்டு விழி நீராய் வெளிப்பட்ட இரண்டாவது திருக்கோயிலில் நின்றிருந்தேன். முதற் கோயில் பிரான்சு நாட்டிலுள்ள லூர்து மாதா திருத்தலம்.களமாட முடியாத கவலையின்றி நிரந்தரமாய் படுக்கையிலாகிவிட்ட துயரம் கடுகளவும் அந்தப் பிள்ளைகளுக்கு இருக்கவில்லை. உடல் செயலற்று செத்ததுபோல் ஆனாலும் வெம்பகை முடித்து தமிழீழம் வெல்லும் வேகம் மட்டும் குறையவில்லை. வார்த்தைக்கு வார்த்தை "தமிழீழம் வெல்லும்' என்றார்கள். ""இஞ்செ வாங்கோஃபாதர்'' என்று உரிமையோடு அருகில் அழைத்தார் மதி என்ற போராளி. ""நானும்கேத்தலிக் (ஈஆபஐஞகஒஈ) தான் ஃபாதர். அரியாலை சர்ச், சிஸ்டர் (கன்னியாஸ்திரி) ஆக வேண்டி கான்வென்ட்லெ படிச்சுக் கொண்டிருந்தப்பதான் ஒருத்தருக்கும் சொல்லாத இயக்கத் துக்குப் போனேன். எங்கட நாட்டு நிலையிலெ கான்வென்ட்லெ இருக்கிறதும் புலிகள் இயக்கத்திலெ இருக்கிறதும் ஒன்றுதானே ஃபாதர். கஷ்டப்படாத சனத்துக்காகவும், நீதிக்காகவும் தானே இயேசப்பா சிலுவையிலெ மரிச்சார்? சரிதானே, சொல்லுங்க ஃபாதர்'' என்றார். வரலாற்றில் வந்து போன தேவகுமாரர்களை நமது காலத்திற்கேற்றபடி மீள் கண்டெடுத்தல் செய்யும் கடமை தங்களுக்கு உண்டு என கருதியும் எழுதியும் வரும் எனக்கு தனது கடவுளை தமிழீழப் போர்க்களத்திற்கு கொண்டு வந்து நிறுத்திய மதி, மிகுந்த மனநிறைவுதந்தார்.அப்போல்லோ மருத்துவமனை உயர் பராமரிப்பு பார்த்திருக்கிறேன். ஸ்ரீ ராமச்சந்திராவில் நானே அனுபவித்திருக்கிறேன். தேர்ந்த மருத்துவர்கள், தூய்மை, சரியான மருந்து, நல் உணவு, நேசம் தோய்ந்த கண் காணிப்பு இவைதான் உயர்தர பராமரிப்பின் வரையறையெனக் கொண்டால் அப் போராளிகள் பராமரிக்கப்பட்டவிதம் அப்போல்லாவைவிட ஸ்ரீராமச்சந்திராவை விட மேல்.உக்கிரபோர் நடக்கும் காலத்தில்கூட வாரம் ஒரு மாலைப்பொழுது இவர்களோடுதான் இருப்பாராம் பிரபாகரன். சாக்லெட் கொண்டு வருவார், அவர்களோடு உணவருந்துவார். களத்தின் கதைகள் பேசிக்கொண்டிருப்பார் என்றார்கள்.இடுப்புக்கு கீழே செயலிழந்து ஆனால் இரு கைகளும் நன்றாயிருந்த போராளிகளுக்கு கம்ப்யூட்டர் கல்வி கற்றுக்கொடுக்கும் ஏற்பாடுகளை பிரபாகரன் செய்திருந்தார். ஒரு கை இழந்த போராளி ஒருவருக்கு ஜெர்மனியில் எலக்ட்ரானிக்கை விற்கப்படுவதை அறிந்து 46 லட்ச ரூபாய் செலவில் வாங்கிப் பொருத்தியிருக்கிறார்..உடல்வலி தவிர்த்தலும், உயிரைக் காத்தலும் பொதுவாக சராசரி மனித வாழ்வின் முதன்மையான அக்கறைகள். அதற்காகவே நமது முயற்சிகள், போராட்டங்கள்,சமரசங்கள், சரணடைதல்கள், பொய்கள், அடிபணிதல்கள் அனைத்தும் அமைகின்றன.இங்கே ஈழ நிலத்தில் அச்சமில்லா புன்னகையோடு மரணத்தை எதிர்கொண்டு உயிரினை ஈகை செய்ய ஆயிரமாயிரம் இளையர்கள் அணிவகுத்து நிற்பதை எண்ணி காரணங்களும் விடைகளும் தேடிய நாட்கள் உண்டு. தங்களது தமிழ் இனத்தின் நீண்ட துன்பவரலாற்றை முடிவுக்குக் கொண்டுவரும் தமிழ் ஈழக் கனவு மட்டுமே அத் தியாகத்திற்குக் காரணம் என அதுவரை நான் எண்ணியிருந்தேன். ஆனால்பிரபாகரன் என்ற தலைவனின் நேசமும் அதற்குக் காரணம் என்பதை காயமுற்று அசைவின்றிக் கிடந்த இப்போராளிகளின் திருக்கோயிலில் நின்று அறிந்தேன், அகம்நிறைந்தேன்.அப்போது தாரணிஎன்ற போராளி. ""ஃபாதர்... நீங்க சிவசங்கரியின்டெ கடிதம் வானொலியிலெ படிச்சினிங்களே... சிவசங்கரியின்டெ பருத்தித்துறைதான் என்டெ ஊரும். பள்ளிக்கூடத்திலேர்ந்து நேரா இயக்கத்துக்கு ஓடி வந்திட்டேன். மூன்டு மாசத்துக்குப் பிறகுதான் கேட்டு கேட்டு அம்மா வந்து அழுதது. எனக்கும் அன்டு ரா முழுக்க அழுகையாத்தான் இருந்தது. என்னெண்டு செய்ய ஃபாதர்...சிங்கள ஆமிக்காரன் பள்ளிக்குப்போற எங்கட பிள்ளையள தினமும் சோதனையிடுறகாலம் முடியணும். எங்கட தலைவர் காலத்திலேயே முடியணும்''.அரைநாள் அப் பரிசுத்த தேவதைகளின் கதைகள் கேட்டேன். ஒவ்வொருவரோடும் தனித்தனியாகப் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினார்கள்.. ஒரு வாரத்திற்குள் புகைப்பட பிரதிகள் அனுப்ப வேண்டு மென்றும் உத்தரவிட்டார்கள். அவர்களுடனான உரையாடலில் அறிந்து உறைந்து போன முக்கியமான உண்மையொன்று என்னவென்றால் அங்கிருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் படுகாயமுற்றது.சிங்களராணுவத்துடனான சண்டைக்களத்தில் அல்ல, சமருக்குத் தங்களையே ஆயத்தம் செய்த பயிற்சி முகாமில் என்ற விபரம். நிஜமாகவே ஆடிப் போனேன். பயிற்சி முகாம் பார்க்க ஆசைப்பட்டேன். அனுமதி கடினம். சாத்தியமில்லை என்றார்கள். அப்போதைய அரசியற்பிரிவு பொறுப் பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் கால்பிடிக்காத குறையாய் கெஞ்சினேன். ஒருவாரகால போராட்டத்திற்குப்பின் பயிற்சிப் பிரிவிற்குப் பொறுப்பான...இரு வாரங்களுக்கு முன் தலைவரைப்பாதுகாத்து வீரமரணமடைந்த கடாஃபி அவர்களோடு தொடர்பு ஏற்படுத்தித் தந்தார்.மெய்சிலிர்க்கும் பயிற்சி முகாம் அனுபவத்தை பின்னர் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பிரபாகரன் அவர்களுடன் நேர்காணல் எளிதாய் நடந்துவிட பயிற்சி முகாம் பார்க்க ஒருவார போராட்டமென்றால் அதன் முக்கியத்துவத்தைநீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள், காத்திருங்கள்.விடைபெறுமுன்அத்தனை பிள்ளைகளும் சேர்ந்து என்னைக் கேட்டது... ""ஏன் ஃபாதர் இந்தியா எங்கட போராட்டத்தை அழிக்க நினைக்குது? எங்கட சனத்தையும் இந்தியாவையும் விட்டா உலகத்துல எங்களுக்கு வேற யார் ஃபாதர் இருக்கிறாங்கள்? இந்தியா மனசுவெச்சா எங்களுக்கு கெதியிலெ தமிழ் ஈழம் கிடைக்கும்.'' இன்றும் அவ்வப்போதுஎன்னைப் பிராண்டும் அப்பிள்ளைகளின் கேள்வி : ""எங்கட சனத்தையும் இந்தியாவையும் விட்டா உலகத்துல எங்களுக்கு வேற யார் இருக்கிறார்கள்?'' விடுதலைப்புலிகளின் நுண்கலைப் பிரிவிற்குப் பொறுப்பாளராயிருந்த சேரலாதன்தான் என்னை தன் வாகனத்தில் கூட்டிச் சென்றிருந்தார். "மீண்டும் உங்களை சந்திக்கவருவேன்'' என்று கூறி வணங்கிப் புறப்பட்டேன். அடர்ந்து கனத்த கனவெளிபோல் மனது நிறைந்திருந்தது. எவருக்கும் தெரியாமல் பூத்துச் சிரிக்கும் காட்டுப்பூக்கள் பல்லாயிரமாய் என்னுள் கண்சிமிட்டி மலர்ந்திருந்தன. என்லூர்து மாதா திருத்தலம்போல் இங்கும் நான் கழுவப்பட்டிருந்தேன். சமீபத்தில் கிளிநொச்சி நகர் சிங்கள ராணுவத்திடம் விழுந்தபோது என் நினைவுக்கு வந்து என்னை தவிக்கவிட்டது காயமுற்ற இத்தேவதைகள்தான். ""கடவுளே, மாதாவே இப்பிள்ளைகளை காத்தருள்வீர்'' என்று அதிகாலைவரை ஓரிரவு மன்றாடினேன். நக்கீரன் வாசகர்களே, காட்டுக்குள் இப்பிள்ளைகள் எத்தீங்கும் நேராமல் நல்ல செய்திகள் பிறக்கும் பிறிதொரு நாளுக்காய் உயிர்வாழ வேண்டுமென நீங்களும் உங்கள் விருப்ப தெய்வங்களை மன்றாடுங்கள்.இன்று உணர்வாளர்கள் அனைவரது மனதிலும் எழுகின்ற கேள்வி, ""பிரபாகரன்எங்கிருக்கிறார்?'' இதனை நான் எழுதுகையில் சிங்கள ராணுவம் முல்லைத்தீவில் தமிழ் மக்கள் மீது இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது. ஞாயிறு இரவு தொடங்கி திங்கள் நண்பகலுக்குள் 1100 தமிழர்கள் கொல்லப்பட்டு 1700க்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர். பிரபாகரன் சரணடைய 24 மணிநேரம் சிங்களம் கெடு விதித்துள்ளது. களநிலையை உள்ளுணர்வோடு யூகிக்க மட்டுமே முடிகிறது. பிரபாகரன் முல்லைத்தீவில் இல்லை என்பதே என் கணிப்பு. படையணிகளும் எதிர்காலப் போராட்டத்திற்காய் பல திசைகளிலும் பிரிந்து சென்றுள்ளார்கள்.""எனதுசாம்பல்கூட எதிரிகள் கையில் கிடைக்கக் கூடாது'' என தன்னுடன் நிற்கும்தோழர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் பிரபாகரன். எனது நேர்காணலின் போதுமரணத்திற்கு வெகு அருகில் தான் சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இயற்கை உங்களை ஏதோ ஒன்றிற்காய் காத்து வருகிறதெனக் கருதலாமா?'' என்று கேட்டேன். ""நான் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் இருப்பதாக இயற்கை நினைக்கிறது போலும்'' என சிரித்துக்கொண்டே சொன்னார்.மனிததர்மங்கள் முழுவதுமாய் தோற்கிறபோது இயற்கை இறங்கி வரும். காடுகளுக்குள் துன்புறும் அப்பாவி மக்களைப்போல் வேடமிட்டு சிங்கள சிறப்பு அதிரடிப்படைபிரிவுகள் பிரபாகரன் வருகைக்காய் காத்திருப்பதாய் செய்திகள் வருகின்றன. ஈழத்து எல்லைகளின் காவலன் நல்லூர் முருகன் துணையிருப்பான். பிரபாகரன்அவர்கள் சொன்ன இன்னும் பல விஷ யங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Good inside story...please continue your important work..greetings from norway!
Post a Comment